×

வங்கி, வழக்கறிஞர், காவலர் என வெவ்வேறு எண்ணிலிருந்து அழைத்து கட்டி முடித்த லோன் பணத்தை மீண்டும் கட்டக்கோரி மிரட்டல்: மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்

தாம்பரம்: கட்டி முடித்த லோன் பணத்தை மீண்டும் கட்ட வேண்டும் என கூறி செல்போனில் மிரட்டல் விடுத்த நபர்கள் மீது தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அண்ணா தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (49). இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில்ரூ.25 ஆயிரம் லோன் பெற்று, அதனை முறைப்படி திரும்பி செலுத்தி முடித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களா ஏழுமலைக்கு பல்வேறு செல்போன் எண்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ளது. அதில் பேசிய ஆண் மற்றும் பெண் நபர் உங்கள் மீது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், நீங்கள் 15 நாட்கள் ஜெயிலில் செல்லவேண்டியிருக்கிறது. எனவே, அதனை தவிர்க்க உடனே வாங்கிய லோனை திருப்பி செலுத்துங்கள் என மிரட்டி உள்ளார்கள்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஏழுமலை அவர்களிடம் தான் வாங்கிய லோன் குறித்த விவரங்களையும், வழக்கின் விவரங்களையும் தனக்கு அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார். ஆனால், போனில் பேசிய நபர்கள் அவர் கேட்ட விவரங்களை தராமல் அழைப்பை துண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை வீட்டில் இருந்தபோது, மீண்டும் ஏழுமலையின் செல்போன் எண்ணிற்கு 85249 79235 என்ற எண்ணில் இருந்து பேசிய நபர், தான் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் பேசுவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கில் உங்களுக்கு எதிராக வாரான்ட் போடப்பட்டுள்ளதாகவும், அதனால் உங்களை கைது செய்து சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைத்து விடுவோம் என மிரட்டியதோடு, உடனே நீங்க பணத்தை கட்டிவிடுங்கள் எனவும், வங்கியின் வழக்கறிஞரை பார்த்து பணத்தை செட்டில் செய்து விடுங்கள் இல்லையென்றால் உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும் என மிரட்டிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர் கார்த்திக் என்பவர், சேம்பர் நம்பர் 14ல் இருந்து பேசுவதாக கூறி, ஏழுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி, அசிங்கமாக பேசியுள்ளார். பின்னர், 78259 36562 என்ற எண்ணிலிருந்து தான் வங்கியின் வழக்கறிஞர் பிரியா பேசுவதாக கூறி, ஏழுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். வங்கி என்ற பெயரிலும், வழக்கறிஞர் என்ற பெயரிலும், காவலர் என்ற பெயரிலும், பல்வேறு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால், அதிர்ச்சியடைந்த ஏழுமலை சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கூடுவாஞ்சேரி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

The post வங்கி, வழக்கறிஞர், காவலர் என வெவ்வேறு எண்ணிலிருந்து அழைத்து கட்டி முடித்த லோன் பணத்தை மீண்டும் கட்டக்கோரி மிரட்டல்: மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Municipal Police Commissioner ,Tambaram ,Tambaram Municipal Police Commissioner's Office ,Birkankarani ,Anna Street ,Yehumalai ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...